மக்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும்!

சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுமே பயங்கரவாத தடைசட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். எனவே இலங்கை அரசாங்கம் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.
    
பயங்கரவாத தடை சட்டத்தை முற்றாக நிக்கப்படவேண்டும் என்ற கையேழுத்து போராட்டம் உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இலங்கை விடயம் தொடர்பில் 12 வருடங்களுக்கு முதல் இந்த விடயங்கள் ஆராயப்பட்டபோது அதற்கு முன்னர் 2012 முதல் தடவையாக இலங்கை அரசாரங்கம் செய்யவேண்டிய விடயங்கள் என்ன என்று அழுத்தங்கள் கொடுக்கப்பட்டபோதும் பாரிய ஒரு சந்தேகம் நிலவியது. சிரியா,ஈராக்,வடகொரியா போன்ற சர்வதேச நாடுகளில் எரிந்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் இடம்பெற்ற வண்ணம் இருந்தன.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து கொண்டிருந்த நேரத்தில் அங்கே யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆகையினால் ஐ.நாவின் கவனம் இலங்கை மீதான கண்காணிப்பு குறைந்துவிடும் என்ற அச்சம் எங்கள் மத்தியில் இருந்தது. ஆனாலும் கடந்த 10 வருடங்களை மீளத்திரும்பிப் பார்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மீதான கரிசனை குறையவில்லை தொடர்ச்சியாக அந்த அழுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.

இந்தத் தடவையும் ஐ.நா.கூட்டத்தொடர் இடம் பெறவுள்ள சில நாட்களுக்கு முன்னதாக ரஷ்யா உக்ரேன் நாட்டுக்குள் புகுந்து மிக மோசமான போர்‌ நடந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இதனைக் கவனிக்கவேண்டியது அனைவரின் கடப்பாடும் ஆகும்.

ஆனால் அப்படியான சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழ் விவகாரம் கவனிப்பாரற்றுப் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இந்தத் தடவையும் மிகக்கடுமையான அறிக்கை ஐ.நா உயர் ஸ்தானிகரிடத்திலிருந்து வந்திருக்கின்றது.

நாளை 3ஆம் திகதி இது தொடர்பான கலந்துரையாடல் ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இடம் பெறவுள்ளது. ஆகையால் உக்ரேனில் கடுமையான போர் நடந்துகொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்திலும் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஐ.நா.மனித உரிமை பேரவையின் கவனம் சற்றும் குறையாமல் தொடர்ந்தும் இருக்கின்றது.

இது சிறந்த விடயம் நாங்கள் அனைவரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் யுத்தத்தின் கொடூரம் அறிந்த வகையில் உக்ரேனில் இடம் பெறுகின்ற போர் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். என்று நாங்களும் கோரிக்கை விடுக்கின்றோம்.

எல்லா நாடுகளும் விடுக்கின்ற கோரிக்கையாக இருந்தாலும் கூட பாதிப்படைந்த மக்கள் அதிலும் குறிப்பாக 12 வருடங்களுக்குப் பிறகும் யுத்தக் கொடுமையை அதன் பாதிப்பை அனுபவித்துக்கொண்டிருக்கின்ற மக்கள் என்ற வகையில் உலக தரப்பில் ரஷ்யாவிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

இந்தப் போரை உடனடியாக நிறுத்தும் படியாக மேலும் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க கோரிய எமது போராட்டம் அனைத்து இடங்களிலும் இடம்பெற்று வருகிறது.

மலையகத்திலும் இப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். தென்பகுதியின் சில நகர்களிலும் இந்த கையொழுத்து போராட்டத்தை செய்யவேண்டும் என்று எமக்கு பலர் அழைப்பு விடுத்துள்ளார்கள். இப்போராட்டம் வெற்றிகரமாக நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் இப்பொழுதாவது இதற்கு செவிமடுக்கவேண்டும் சர்வதேச அழுத்தம் தொடர்ச்சியாக இருக்கிறது.

40 ஆண்டுகளாக நாங்கள் இதனால் அல்லற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதற்கு எதிராக குரல் கொடுக்காதவர்கள் கூட இந்தச் சட்டத்தின் கொடூரத்தை உணர்ந்தவர்களாக இதை நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள்.

சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நாட்டுக்குள்ளேயே இதனை நீக்கவேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் என அனைத்து மக்களும் இதற்கு எதிராக குரல் கொடுக்கின்ற இந்த சூழ்நிலையில் அரசாங்கம் மக்களின் குரலுக்கு செவிசாய்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!