கொரோனாவை காரணம் காட்டிய அரசு இனி உக்ரைன் மீது பழி போடும்!

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏற்படும் தோல்விகளுக்கு உக்ரைனின் நெருக்கடி நிலையை அரசாங்கம் காரணம் காட்டும் என்றும், நாட்டின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்க தற்போதைய அரசாங்கம் தயாராக இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, தெரிவித்தார்.
    
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரஸை தனது குறைபாடுகள் குற்றம் சாட்டிய அரசாங்கம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உக்ரைன் நெருக்கடியை காரணம் காட்டும் என்று குறிப்பிட்டார்.

தமது திறமையின்மையை மறைப்பதற்காக அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய வெளிப்புற காரணிகளை நாட்டின் நிர்வாகிகள் குற்றம் சுமத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மின்வெட்டு ஏற்படும் போது அரசாங்கத்தில் இருப்பவர்கள் இலங்கை மின்சார சபையின் தலைவரையும், எரிபொருள் தட்டுப்பாட்டின் போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் குற்றம் சுமத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல, ஏனைய நெருக்கடிகளின் எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களை விமர்சித்து குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்தார்.

மின்வெட்டுகளின் போது அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினர், மின்சக்தி அமைச்சரின் செயற்பாடுகளை விமர்சித்ததாகவும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் மீது குற்றம் சுமத்தியதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்களுக்கு பணம் செலுத்துவதற்கு தேவையான டொலர்களை வழங்கவில்லை என எரிசக்தி அமைச்சர், நிதி அமைச்சரை விமர்சித்து வருவதாக கயந்த எம்.பி சுட்டிக்காட்டினார்.

அனைத்து பிரச்சினைகளுக்கும் அந்நிய செலாவணி நெருக்கடியே காரணம் என நிதியமைச்சர் குற்றம் சுமத்தி வருவதாகவும், பொதுமக்களின் சுமையை குறைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்காது எனவும் மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளதாக கயந்த எம்.பி குறிப்பிட்டார்.

v நாடு முற்றாக அழிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை எனவும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதால், தற்போது எதிர்க்கட்சிகளைச் சுற்றித் திரண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!