வீரவங்ச மற்றும் கம்மன்பில தொடர்பில் ஜனாதிபதி கடும் முடிவை எடுக்க வேண்டும்

அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினர், அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பாக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாட்டிற்குள் பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலைமையில், இந்த அணியனர், அந்த நெருக்கடியை மேலும் உக்கிரமடைய செய்து மேற்கொள்ளும் இப்படியான செயல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதனால், வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினருக்கு எதிராக ஜனாதிபதி கடும் முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு இருந்துக்கொண்டு அதிகளவில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி அரசாஙகத்தை விமர்சித்து வருகிறார்.

அவர் எந்த சந்தர்ப்பத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்ததில்லை. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கூட அவர் தனது கருத்துக்களை வெளியிட்டதில்லை.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில் அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் வீரவங்ச ஆகியோர் கலந்துக்கொள்ளும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை. தொடர்ந்தும் அரசாங்கத்தை இவ்வாறு நடத்திச் செல்ல முடியாது.
எப்படியான கஷ்டமான முடிவாக இருந்தாலும் ஜனாதிபதி, இவர்கள் சம்பந்தமாக கடும் முடிவை எடுக்க வேண்டும் எனவும் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!