போர் ஆக்கிரமிப்பை விட பயங்கரமான நிலைமையில் நாடு:பிள்ளைகளுக்கு உணவின்றி தற்கொலை செய்துக்கொண்ட தேசிய தந்தை

போர் ஆக்கிரமிப்பை விட மிக பயங்கரமான நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க முடியாது தற்கொலை செய்துக்கொண்ட தந்தையை தற்போது தேசிய தந்தையாக மாற்றி, மேலும் இப்படியான தந்தைகள் உருவாவதை தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அனைவரும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாடு வங்குரோத்து அடைந்து விட்டது என்ற கவலையான செய்தியை நாட்டுக்கு கூற வேண்டியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு என்ற பிரச்சினை குறுகிய காலத்திற்கு தீர்க்கப்பட மாட்டாது.

மின்சாரம் துண்டிக்கப்படுவது மார்ச் மாத இறுதியில் மிக மோசமாக அதிகரிக்கும். உணவு பொருட்களின் விலைகள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரிக்கும். அதேபோல் தொழில் இழப்பு மற்றும் பண மதிப்பிழப்பு என்பன பயங்கரமான நிலைமையாக மாறும்.

இதனால், பழைய கொள்கைகளை கைவிட வேண்டும். சமவுடமை போன்ற கொள்கைகள் இனிமேல் எடுப்படாது. கியூபாவின் கொள்கையும் தற்காலத்திற்கு பொருந்தாது. கியூபா ஊழலற்ற சிறந்த நாடு, எனினும் பொருளதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடு அல்ல. மக்கள் அரசியல்வாதிகளை விமர்சித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை.

மக்கள் தமது அரசியலை காட்டுவதற்கான காலம் வந்துள்ளது. அரசியலை அரசியல் கட்சிகளிடம் வழங்கிவிட்ட அமைதியாக இருக்க வேண்டாம். உங்களது கடமையை செய்யுங்கள். பிள்ளைகளுக்கு சாப்பிட கொடுக்க முடியாமல் தற்கொலை செய்துக்கொண்ட தந்தை.

அவர் தான் தற்போது தேசிய தந்தை. நானும் பிள்ளைகள் இருக்கும் தந்தை. இதே நிலைமை உங்களுக்கும் ஏற்பட இடமளிக்காதீர்கள். தற்கொலை இதற்கு தீர்வல்ல. எமது பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுவோம்.
அரசியல்வாதிகளை திட்டி, சாபமிட்டு, இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாது. உங்களது பிள்ளைகளுக்காக முன் நோக்கி வாருங்கள். ஒரு கொடியின் கீழ் பலமாக இணையுங்கள். போர் ஆக்கிரமிப்பை விட பயங்கரமான நிலைமைக்குள் நாடு விழுந்துள்ளது.

அச்சுறுத்தல், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் வெளியில் வாருங்கள். முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கும் வீடுகளில் மின்சாரம் இல்லை,சாப்பிட உணவு இல்லை, எரிபொருள் இல்லை, மருந்துகள் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அனைவரும் தமது வாழும் உரிமைக்காக தற்போது குரல் கொடுக்க வேண்டும். பிள்ளைகளின் உணவை கொடுக்க முடியாது தற்கொலை செய்துக்கொண்ட தந்தையே உண்மையான தேச பிதா, அவரது மரணத்தின் பலத்தில் வலுவை பெற்று பிள்ளைகளுக்கு உணவு ,மின்சாரம், எரிபொருளை வழங்கக் கூடிய நாட்டை உருவாக்குவோம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!