காற்றில் பறந்த மனிதாபிமானம்: உக்ரைன் அகதிகளை திருப்பி அனுப்பிய பிரித்தானியா!

உக்ரைன் அகதிகளுக்காக இதுவரை 50 விசா மட்டுமே பிரித்தானிய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போது உக்ரைனில் இருந்து வெளியேறும் குடும்பங்களால் ஐரோப்பாவில் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
    
விளாடிமிர் புடினின் கண்மூடித்தனமான வான் தாக்குதலுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் பயந்து வெளியேறும் உக்ரைன் மக்களுக்கு குறிப்பிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தஞ்சமளித்து வந்தாலும், பிரித்தானியா போதிய உதவிகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதிர்ச்சி தகவல் என்னவென்றால், 1,000 மைல்கள் கடந்து பிரித்தானிய எல்லையில் திரண்டுள்ள உக்ரேனிய மக்களை, போதிய ஆவணங்கள் இல்லை என கூறி போரிஸ் நிர்வாகம் திருப்பி அனுப்பும் கொடூரமும் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, உக்ரைன் அகதிகள் தொடர்பில் போதிய முன்னேற்பாடுகள் எதுவும் பிரித்தானியா செய்யவில்லை எனவும், கடந்த 10 நாட்களில் உக்ரேனிய மக்களுக்கு 50 விசா மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையிலேயே, பிரித்தானியாவின் இந்த மெத்தனப்போக்கை மனிதாபிமானமற்ற செயல் என பிரான்ஸ் சாடியுள்ளது. மேலும், உக்ரைன் விவகாரத்தை உள்விவகார செயலாளர் பிரிதி பட்டேல் முறையாக கையாளவில்லை எனக் கூறி தொழிலாளர் கட்சி கிழித்து தொங்கவிட்டுள்ளது.

மக்கள் அவர்களின் உறனவர்களுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு, கலேஸில் அவசரநிலை மையத்தை அமைக்க பிரிதி பட்டேல் உடனடியாக உள்விவகார அலுவலக அதிகாரிகளை அனுப்ப வேண்டும் எனவும் தொழிலாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் உக்ரேனிய மக்களை இருகரம் நீட்டி ஆதரவளிக்கும் போது, அடிப்படை வசதிகளைக் கூட பிரித்தானியா முன்னெடுக்காதது உண்மையில் அவமானகரமான செயல் என விமர்சித்துள்ளனர்.

இது ஒரு சர்வதேச நெருக்கடி என குறிப்பிட்டுள்ள தொழிலாளர் கட்சி, நாம் அவசரமாகச் செயல்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, அவர்களுக்கு உதவ நம்மால் இயன்ற பங்கைச் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனில் இருந்து சுமார் அரை மில்லியன் குழந்தைகள் உட்பட 1.5 மில்லியனுக்கும் அதிகமான அகதிகள் கடந்த 10 நாட்களில் போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!