வெளிச்சத்துக்கு வந்தது ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனம்!

உக்ரைனில் குடியிருப்பு வளாகத்தில் விழுந்து வெடிக்காத ரஷ்ய வெடிகுண்டு ஒன்றின் புகைப்படத்தை வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா பகிர்ந்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் நாளுக்கு நாள் கடுமையான சேதங்களை திட்டமிட்டே ஏற்படுத்தி வருகிறது. மொத்த நாட்டையும் சின்னாபின்னமாக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என போர் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    
மட்டுமின்றி, ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிலேயே உக்ரேனிய வான்வெளியை விமானங்கள் பறக்க தடை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என உக்ரைனின் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா நேற்று நேட்டோவுக்கு அறிவுறுத்தினார்.

மட்டுமின்றி, செர்னிஹிவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்த வெடிக்காத வெடிகுண்டின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், கடந்த 11 நாட்களில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்களின் உயிர்களை இதுபோன்ற குண்டுகள் காவு கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரத்தம் சிந்துவதைத் தடுப்பதற்கான ஒரே வழி, உக்ரைனின் வான்வெளியை மூடுவது அல்லது நாட்டுக்கு போர் விமானங்களை வழங்குவதுதான் என்றார். இதுகுறித்து டிமிட்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்த பயங்கரமான 500 கிலோ ரஷ்ய வெடிகுண்டு செர்னிஹிவ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் விழுந்து வெடிக்கவில்லை. ஆனால் இதுபோன்ற வெடிகுண்டுகளால் பல அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து எங்கள் மக்களை பாதுகாக்க எங்களுக்கு உதவுங்கள் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, உக்ரைனுக்கு போர் விமானங்கள் வழங்குவது தொடர்பில் நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால், உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்குவது ரஷ்யாவுடன் போருக்கு தயாராவதற்கு ஒப்பானது என விளாடிமிர் புடின் அச்சத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!