அமைச்சு பதவியில் இருந்து விலக மாட்டேன்

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை என்றாலும் அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், அமைச்சு பதவியில் இருந்து விலகுவதற்கு புதிய ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் நாளைய தினம் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி வரிசையிலேயே அமர்வேன். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் கட்சியின் வரிசையிலேயே அமர்வார்கள் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தி அல்லது மக்கள் விடுதலை முன்னணி என்பன பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் என்ன செய்வீர்கள் என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள நாணயக்கார, அப்படியான அழைப்பை ஏற்றுக்கொள்ள போவதில்லை எனவும் அவ்வாறான அழைப்புகளை விடுப்பதற்கான காரணங்களும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!