வடக்கு, கிழக்கில் நில அபகரிப்பு- பிரிட்டன் கவலை!

இலங்கையின் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்பு குறித்து பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றுகையில் பிரிட்டனின் மனித உரிமைகளிற்கான சர்வதேச தூதுவர் ரிட்டா பிரென்ஞ் இதனைத் தெரிவித்துள்ளார்.
    
பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ந்தும் முன்னேற்றம் ஏற்படாதது குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கரிசனையை நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம், உலகின் கவனத்தை ஈர்த்த பல மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் பின்னடைவுகள் காணப்படுகின்றன என்பது குறித்து நாங்கள் ஏமாற்றமடைகின்றோம்.

கவிஞர் அஹ்னாவ் ஜசீம் மற்றும் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா விடுதலை செய்யப்பட்டதை சாதகமான முதற்கட்ட நடவடிக்கை என நாங்கள் வரவேற்கின்றோம்.
அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஆரம்ப சீர்திருத்தங்களை நாங்கள் அங்கீகரிக்கும் அதேவேளை இவை போதுமான அளவிற்கு செல்லவில்லை என்பதை தெரிவிக்கின்றோம்.

சிவில் சமூகத்தினர் துன்புறுத்தப்படுவது அச்சுறுத்தப்படுவது சிவில் நிர்வாக செயற்பாடுகள் இராணுவ மயப்படுத்தப்படுவது,நன்கறியப்பட்ட மனித உரிமை சம்பவங்களில் குறிப்பிடப்பட்ட நபர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டமை, போன்றவை குறித்து நாங்கள் கரிசனைகளை கொண்டுள்ளோம்.
குறிப்பாக இந்த நியமனம் கடும் கவலையளிக்கின்றது. இழப்பீடு மற்றும் காணாமல்போனவர்கள் குறித்து அரசஸ்தாபனங்களில் இடம்பெறும் செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இவை முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் செயற்பாடுகளுடன் இணைந்ததாக காணப்படுவது அவசியம்.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் அதிகளவு புறக்கணிப்பை எதிர்கொள்வது மற்றும் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறும் நில அபகரிப்பு குறித்து நாங்கள் கரிசனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

46-1 தீர்மானம் குறித்து இலங்கை ஆக்கபூர்வமான விதத்தில் ஈடுபாட்டை காண்பிக்க வேண்டும்,ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!