ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த கூட்டணிக் கட்சிகள் மறுப்பு:சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம்

அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி தற்போது உச்சமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வர முக்கியமான பங்களிப்புகளை செய்த விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் 11 கூட்டணிக் கட்சிகளின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கத்தை விமர்சிப்பதை குறைத்துக்கொண்டுள்ளது.

இதனடிப்படையில், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மறுத்து வருவதாக தெரியவருகிறது.

இதனிடையே அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்துள்ள பின்னணியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதற்கு அமைய இன்று பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதன் போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சம்பந்தமாக முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதுடன் அது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகள் பற்றியும் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த பேச்சுவார்த்தையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!