ஷானி அபேசேகர வழக்கிலிருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதிபதி

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட விலகியுள்ளார்.

யசந்த கோதாகொட  உள்ளிட்ட  மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த  மனுவை பரிசீலிப்பதில் இருந்து  தாம் விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை வழங்குமாறு கோரி  குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர  அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னின்று நடத்திய சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தன்னைக் கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு ஷானி அபேசேகர தனது அடிப்படை உரிமை மனுவில் கோரியுள்ளார்.

அத்துடன், தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய தன்னைத் தடுத்து வைப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அவர் கோரியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!