கோட்டாபய மகிந்த அரசாங்கமே அனைத்துக்கும் காரணம்! கடுமையாக சாடும் பொதுமக்கள்

இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் தேசிய அரசொன்றை அமைப்பது குறித்து ஆளுங்கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நீண்ட மந்திரலோசனைகளை நடத்தியுள்ள நிலையில், ஆட்சி மாற்றமொன்று அவசியமென பொது மக்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தேசிய அரசொன்றை அமைத்து அதன் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை நியமிப்பதென்றும் இதர தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளை அதில் இணைப்பதெனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இலங்கையில் பேசுபொருளாக மாறியுள்ள ஆட்சிமாற்றம் குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் பொருட்டு ஐபிசி தமிழ் கள விஜயத்தை மேற்கொண்டது.எவ்வாறெனினும் தேசிய அரசொன்னை அமைப்பது தொடர்பில் அரசுக்குள் எதிப்புகள் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய அரசொன்றை அமைத்து பிரதமர் பதவியில் ரணிலை நியமித்தால் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விடயம் தொடர்பில் மக்களின் அதிருப்தியை எதிர்நோக்க நேரிடுமென ஆளுங்கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் அரச உயர்மட்ட தலைவர்களை எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு இல்லையெனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இது தொடர்பான சர்வ கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!