ஹிருணிகா குடும்பத்தை பின்தொடரும் மர்ம நபர்கள்!

மோட்டார் சைக்கிள்களில் வரும் முகமூடி அணிந்த நபர்களால் தானும் தனது குடும்பத்தினரும் பின்தொடரப்படுவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தமது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
    
கடந்த சனிக்கிழமை மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்துக்கு முன்பாக மகளிர் அணியினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த தான் உட்பட சிலரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் எச்சரித்ததாக ஹிருணிக்கா முன்னர் குற்றஞ்சாட்டினார்.

தனது குழந்தைகள் மிகவும் சிறியவர்கள் எனவும் பாடசாலைக்குச் செல்லும் வழியில் சிலர் மோட்டார் சைக்கிள்களில் குழந்தைகளைப் பின்தொடர்வதை தாங்கள் அவதானித்ததாகத் தெரிவித்தார்.

மேலும், நேற்று முன்தினம், திருமண வைபவமொன்றுக்கு தான் சென்றிருந்த போது, தனது வாகனத்துக்குப் பின்னால் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தன்னைப் பின்தொடர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

தன்னுடைய மற்றும் தனது கணவரின் தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது என்பது தனக்குத் தெரியும் எனவும் நடத்தப்பட்ட போராட்டமானது, ஒரு தரப்பினரால் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்களாலும் நடத்தப்பட்டது என்பதை ஜனாதிபதி நினைவில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாட்டின் தலைவரிடம் பதில் கேட்க அமைதியான போராட்டம் மட்டுமே செய்யப்பட்டது என்றும் அது தவறா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், போராட்டத்துக்கு வந்த பெண்களும் தற்போது ஆபத்தில் உள்ளனர் எனவும் அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளதுடன், அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!