தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வசித்த சிறுவன்!

திருப்பதி ரூரல் மண்டலம் வித்யாநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜலட்சுமி (வயது 41). இவர், திருப்பதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.

இவரின் மகன் ஷியாம்கிஷோர் (10). இவன், திருப்பதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். ராஜலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு அறையில் படுத்துத் தூங்கினார். ஆனால் அவர் படுத்த படுக்கையாக உயிரிழந்து விட்டார்.
    
4 நாட்களாக எழவில்லை
தாய் உயிரிழந்தது தெரியாமல் தூங்குவதாக நினைத்து மகன் ஷியாம்கிஷோர் தனது தாயாரை படுக்கையில் இருந்து எழுப்ப மனமில்லாமல் இருந்து வந்தான். அவன், 2 நாட்களாக வீட்டில் இருந்த உணவுகளை சாப்பிட்டு பசியை போக்கி வந்தான். 3-வது நாள் அவன் வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளான். தொடர்ந்து 3 நாட்களும் பள்ளிக்கும் சென்று வந்தான்.

4-வது நாள் ஷியாம்கிஷோரின் மாமா உறவின் முறையான துர்காபிரசாத், சிறுவனுக்கு போன் செய்து விசாரித்துள்ளார். அப்போது அவன், தாயார் வீட்டின் அறையில் படுத்துத் தூங்குவதாகவும், 4 நாட்களாக எழவில்லை என்றும் தெரிவித்துள்ளான். தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த துர்காபிரசாத், ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

போலீசார் விசாரணை
வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அவர், திருப்பதி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். வீட்டின் அறையில் உயிரிழந்து 4 நாட்களாக கிடந்த ராஜலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயார் உயிரிழந்தது தெரியாமல் தூங்குவதாக நினைத்து தாயின் பிணத்துடன் 4 நாட்கள் சிறுவன் வசித்து வந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!