நெருக்கடியை தீர்க்க தவறினால் நாட்டை இழக்க நேரிடும்!

நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நிலவும் நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைப்பதில் எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.
    
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நாட்டின் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்ததில்லை எனவும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை உயர்த்துவதற்கு அனைத்து தரப்புக்களுக்கும் இடையில் ஒரு தேசிய உடன்பாடு தேவை என குறிப்பிட்டார்.

நிதியமைச்சருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாகத் தெரிவித்த அவர், அதனை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிக நேரத்தை செலவிட்ட போதும் அவற்றுக்கான தீர்வுகளை வழங்கத் தவறிவிட்டது என்று தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும், அது இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பதிலாக தற்போதுள்ள நிலைமைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

நாடு பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாக அனைத்துத் தரப்பினருக்கும் இடையில் வலுவான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!