கோட்டாபயவை கைவிடும் அரசியல் கட்சிகள் – தென்னிலங்கையில் ஏற்படப் போகும் மாற்றம்

சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியை சமாளிக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தீவிரம் அடைந்துள்ளது.
அரசாங்கத்தினால் எதிர்வரும் 23ஆம் திகதி கூட்டப்படும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என சில கட்சிகள் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அனைத்துக் கட்சி மாநாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சகல தரப்பினரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தீர்மானித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளாக செயற்பட்ட தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய உட்பட 10 அரசியல் கட்சிகள் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என இன்றுவரையில் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் ஊடகமொன்று வினவிய போது இந்த மாநாடு வெறும் ஊடக கண்காட்சி என ஐக்கிய மக்கள் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சி பேச்சாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இவ்வாறான பல மாநாடுகளும் கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்ட போதிலும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என பேச்சாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான மாநாடுகளில் கலந்து கொண்டு தமது கட்சிகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய போதிலும் அரசாங்கம் விரும்பியதையே அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவ்வாறான செயற்பாடுகளினால் நாடு இவ்வாறான அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் மேலதிக கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறித்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!