உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது இன்று வாக்கெடுப்பு

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளின் பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக, இந்த திருத்தச்சட்ட வரைவை கவனமாக பரிசீலிப்பதற்கு, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றும் அதனால், வாக்கெடுப்பை பிற்போடுமாறும் கூட்டு எதிரணி தரப்பில் கோரப்பட்டது.

எனினும், இன்றைய நாளே வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஜேவிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் இருந்தால், செப்ரெம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் அதனை செய்தால், டிசெம்பர் மாதம் சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக, உள்ளூராட்சித் தேர்தலை நடத்தலாம் என்றும் ஜேவிபி ஆலோசனை கூறியது.

இதையடுத்து. இன்று உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Tags: ,