பொது திட்டத்தின் அடிப்படையில் ஐதேக- சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான புதிய திட்டத்தை விரைவில் முன்வைக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு இரு கட்சிகளின் அமைச்சர்கள் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகுவது பற்றி ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர் அரசாங்கத்திலிருக்கும் ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

“இந்தச் சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். புதிய திட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாம் கலந்துரையாடியிருந்தோம். இரு கட்சிகளின் அமைச்சர்களாலும் தயாரிக்கப்படும் புதிய திட்டம் எமக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்தகால குறைபாடுகளை திருத்திக் கொண்டு புதிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்வதாயின் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பிலிருந்தும் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் பொதுவான கொள்கைத் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் புதிய திட்டம் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கையளிக்கப்படும் எனவும் அமரவீர மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!