மாணவியிடம் காதலை சொன்ன ஆசிரியர்: தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (43). இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக, திசையன்விளையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக ஆசிரியர் முத்தையா 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரிடம் அடிக்கடி தேவையில்லாமல் பேசி வந்துள்ளார்.
    
இந்நிலையில், சம்பவத்தன்று வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கணக்கு சொல்லி கொடுப்பதுபோல் கையை பிடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று, வகுப்பு முடியும்போது கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த மாணவியை பார்த்து ஆசிரியர் முத்தையா கண் அடித்து ‘ஐ லவ் யூ’ என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பள்ளி முடிந்ததும் தனது பெற்றோரிடம் சென்று விவரத்தை கூறியுள்ளார். மேலும், இனி பள்ளிக்கு போக மாட்டேன்.. போக வலியுறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், நேற்று நள்ளிரவு அந்த பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஆசிரியர் தங்கி இருந்த வீட்டிற்கு சென்றனர். அங்கு, ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். கண் அடித்ததாக கூறப்படும் இடது கண்ணிலும் தாக்கினர்.

இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பொதுமக்கள் சிலர் சமரசம் செய்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் அவரை தப்ப விடாமல் அங்கேயே பிடித்து வைத்துக் கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை தப்ப விடாமல் பிடித்து வைத்திருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால், சப்-இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஆசிரியர் முத்தையாவை கைது செய்தனர். மேலும், நடந்த சம்பவம் குறித்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!