ஐஎம்எவ் உதவி பெற ஏன் தாமதம்?

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் ஏன் தாமதப்படுத்தியது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
    
இலங்கையின் வருடாந்த கடன் தவணைகள், இறையாண்மை பத்திரங்கள் மற்றும் பிறவற்றை செலுத்துவதற்கான வழியை தேடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது என்று ஜனாதிபதி, புதன்கிழமை (16) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர், நன்மை தீமைகளை ஆராய்ந்த பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்ததாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு நேர்மறையான நடவடிக்கையாக இருந்தால், தற்போதைய சிரமங்களைத் தணிக்க நிதியத்தின் ஆதரவை முன்னரே நாடியிருக்க வேண்டும் என்றார்.

இவ்வாறானதொரு நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் பிரபல்யத்தை பெற்றுக்கொள்வதற்காக 600 பில்லியன் ரூபாய் பெறுமதியான வரிச்சலுகைகள் வழங்கப்படுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூபாயை செயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் இதனால் நாடு 4 பில்லியன் டொலர் வருமானத்தை இழக்கும் என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொதுமக்கள், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது ஒருபுறமிருக்க, எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவமே தற்போதைய பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!