கோத்தா விவகாரத்தினால் கூட்டு எதிரணிக்குள் பிளவு

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில், கூட்டு எதிரணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டு எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம், நேற்று முன்தினம் இரவு மகிந்த ராஜபக்சவில் இல்லத்தில் இடம்பெற்றது.

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்தில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை, தாமரை மொட்டு சின்னத்தில், கூட்டு பொதுஜன முன்னணி என்ற பெயரில், முன்னெடுப்பது என்று இணக்கம் காணப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம், கோத்தாபய ராஜபக்சவை அதிபர் வேட்பாளராக நிறுத்துவது பற்றிக் கலந்துரையாடப்பட்டதா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், எமக்கு ஒரு ஜனநாயக தலைவரே தேவை. அந்த ஜனநாயக தலைவர் மகிந்த ராஜபக்ச மாத்திரமே என்று தெரிவித்தார்.

அவ்வாறாயின், கோத்தாபய ராஜபக்சவை விரும்பவில்லையா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்,“ கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளராக இருக்க முடியும், ஆனால், அரசுத் தலைவராக மகிந்த ராஜபக்சவை விட வேறு யாரும் இல்லை.” என்று கூறினார்.

அதேவேளை, இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, தமது தரப்பில் சமல் ராஜபக்ச மிகச் சிறந்த வேட்பாளராக இருப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

அவர், மத்திய மற்றும் ஜனநாயக நிலைகளில் இருந்து வாக்குகளை பெறக் கூடியவர். சமல் ராஜபக்ச மிகச் சிறந்த நபர்.” என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!