ஜனாதிபதியுடனான சந்திப்பை கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும்!

ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
    
யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

“ தமிழ் அரசியல்வாதிகள் ஓர் அணியில் திரண்டு எமக்காக பேச வேண்டும். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஜனாதிபதியை சந்திக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக நாங்கள் அறிகிறோம். அதனை அவர்கள் புறக்கணிக்க வேண்டும் என கோருகிறோம்.

அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ள இந்த நிலையில் அவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதனை விட இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி எமக்கான உரிமைகளையும் , எமக்கான நீதியையும் பெற அவர்கள் அணிதிரள வேண்டும்.

குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் , பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியுடான பேச்சுக்களை புறக்கணிக்க வேண்டும்.

ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்வார்கள் ஆயின் அது எமக்கு இழைக்கப்படும் அநீதி மாத்திரமல்ல , துரோகமும் கூட என மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!