சர்வகட்சி மாநாடு – ரெலோ புறக்கணிப்பதாக செல்வம் அறிவிப்பு!

சர்வகட்சி மாநாட்டை டெலோவும் புறக்கணிப்பதாக அந்த கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
    
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் புறக்கணிக்கின்றது. ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டும்படியான கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

தற்போதும் அவ்வாறான நல்லிணக்க சமிஞ்சையைக் காட்டுகின்ற பட்சத்திலே மேற்கொண்டு சிந்திக்கலாம் என்றும் தெரிவித்திருக்கின்றோம். தற்போது சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியிருக்கினற இந்த தருணத்திலே நாங்கள் அதனையும் புறக்கணிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் போது அங்கிருக்கின்ற பொலிஸாரால் மிக மோசமான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

தற்போது வடக்கு கிழக்கை நோக்கியே அமைச்சர்களின், அரச பிரதிநிதிகளின் பயணங்கள் இருக்கின்றது. காரணம் சிங்கள மக்கள் அவர்களைப் புறக்கணித்துள்ளார்கள்.

இத்தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியிலே வந்து தங்களுடைய கருத்துகளைச் சொல்லுகின்ற போது சிங்கள மக்கள் தங்களுக்குச் சார்பாக மாறுவார்கள் என்ற யுத்தியோடு தமிழ்ப் பிரதேசங்களிலே வந்து புத்த கோயில்களை அமைப்பதும், எமது மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவை நிறுத்தப்பட வேண்டும். இந்த அரசாங்கம் அடிப்படையாகப் பொருளாதார ரீதியிலே தன்னை ஒருபோதும் நிவர்ததி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றது.

வெளிநாடுகளில் இவ்வாறான நிலைமைகள், தேர்தல் தோல்விகள் என்பன ஏற்பட்டால் அதன் தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து விடுவார்கள்.

இதேபோல் இன்றைக்கு மிகவும் மோசமான பின்னடைவைக் கண்டிருக்கின்ற இந்த நாட்டின் தலைவர்கள் இராஜினாமா செய்வதுதான் சாலச் சிறந்தது என்பதோடு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ இந்த சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கின்றது” என்று அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!