வாக்கெடுப்புக்கு முன்னரே வெளியேறிய சம்பந்தன், விக்கி!

பயங்கரவாத திருத்தச் சட்ட வாக்கெடுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் புறக்கணித்துள்ளனர்.
    
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சில மாற்றங்களுடன் பயங்கரவாத திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு அதன் இராண்டாம் வாசிப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நேற்று இடம்பெற்றன.

இதனை தமிழ் தேசியக் கட்சிகளும், தமிழ் மக்களும் பல்வேறு சிறுபான்மை கட்சிகளும் நிராகரித்துள்ளன. அதனைத் தொடர்ந்து பயங்கரவாத திருத்தச் சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பின் போது திருத்தத்துக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனடிப்படையில் 51 மேலதிக வாக்குளால் திருத்தச் சட்டம் நிறைவேறியது.

இதில் பயங்கரவாத திருத்தசட்டம் விவாதம் இடம்பெற்ற போது கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது வாக்கெடுப்புக்கு முன்னதாகவே சபையில் இருந்து வெளியேறியிருந்தனர்.

பயங்கரவாத திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பவலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் வாக்களித்துள்ளனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோதரராதலிங்கம் மற்றும் இரா.சாணக்கியன் ஆகிய இருவரும் நாடாளுமன்ற இன்றைய அமர்வுகளில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!