மக்களின் அத்தனை துன்பங்களுக்கும் பசில் ராஜபக்சவின் தவறே காரணம்! கம்மன்பில பதிலடி

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச குரக்கன் சால்வையை அணிந்தாலும் குரக்கனும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மகரகமையில் நடைபெற்ற பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தவறு காரணமாகவே நாட்டு மக்கள் தற்போது துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

மக்களுக்கு கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ள நெருக்கடி தொடர்பாக நான் முன்கூட்டியே அறிந்திருந்தேன். 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிகளை நிறுத்துமாறு நான், விமல் வீரவங்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் யோசனை முன்வைத்தோம்.

எனினும் அப்பிள் பழங்களை இறக்குமதி செய்யாது போனால், சுற்றுலாப் பயணத்துறையை நடத்த முடியாது என நிதியமைச்சர் கூறினார். இது கேலிக்குரியது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் வெள்ளைக்காரர் தமது நாட்டில் உடனடியாக கிடைக்கும் அப்பிள் பழத்தை சாப்பிடாது, விமானத்தில் ஏறி 11 மணி நேரம் பயணம் செய்து, இலங்கைக்கு வந்து, ஆறு மாதங்களாக பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அப்பிள் பழத்தை சாப்பிடுவாரா?.
இதற்கு பதிலாக இலங்கையில் கிடைக்கும் அன்னாசி மற்றும் பலாப் பழங்களை சுற்றுலாப் பயணிகளிடம் பிரபலப்படுத்தலாம் எனவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் குரக்கன் சால்வையையே அணிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!