10 மணித்தியால மின்வெட்டு இருக்காது!

இலங்கை மின்சார சபைக்கு எதிர்வரும் 2 வாரத்திற்கு தேவையான எரிபொருளை தடையின்றி விநியோகிக்க இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதால் எதிர்வரும் வாரங்களில் 10 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த வேண்டிய தேவை கிடையாது.

நாளாந்தம் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் மணித்தியாலங்களை குறைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
    
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்வரும் வாரம் முதல் 10 மணித்தியாலங்கள் மின்விநியோக தடை அமுல்படுத்த நேரிடும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு கடந்த மாதங்களில் சிக்கல் நிலைமை காணப்பட்டதால் மின்விநியோக தடை தொடர்பில் உறுதியான தீர்மானத்தை அறிவிக்க முடியாத சிக்கல் தன்மை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு காணப்பட்டது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தின் போது மின்னுற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி விடுத்த விசேட பணிப்புரையினை தொடர்ந்து மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாளைய தினம் நாடு தழுவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்களும்,20 நிமிடங்களும் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும்.எதிர்வரும் நாட்களில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் காலத்தை மட்டுப்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.புத்தாண்டு காலத்தில் மின்விநியோக தடை பல மணித்தியாலங்கள் அளவு நீடிக்காது.

வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளில் உள்ள நீர் எதிர்வரும் 21 நாட்களுக்கு தேவையான அளவில் மாத்திரம் காணப்படுகிறது. பிரதான நீர் நிலைகளின் நீர்மட்டம் குறைவடைந்து வருகிறதை எம்மால் தடுக்க முடியாது.மழைவீழ்ச்சி கிடைக்கும் வரை நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்படும்.

நீர்மின்னுற்பத்தி பாதிக்கப்படும் பட்சத்தில் நிலக்கரி மின்னுற்பத்தியினை ஊக்குவிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.தற்போது 1 மில்லியன் மெற்றிக்தொன் நிலக்கரி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. மின்சார விநியோக சேவையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு அனைத்து திட்டங்களையும் செயற்படுத்திய வகையில் தீர்வு காண்பது அவசியமாகும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!