7 தமிழர்கள் விடுதலை; மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் தெரிவித்ததாவது,

“இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடி வரும் நிலையில், அவர்களை விடுதலை செய்வதில் தமக்கோ, குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

டில்லியில் தம்மை சந்தித்த இயக்குநர் ரஞ்சித்திடம் இவ்வாறு அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்பு இல்லை என்ற போதிலும், அவர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு கடந்த 28 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் கூட சிறைவிடுப்பு வழங்கப்பட்டதில்லை.

அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மத்திய அரசு, அதன்பின் நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் ராகுல் காந்தியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. அவர் நினைத்தால் 7 தமிழர்களும் நிச்சயமாக விடுதலை ஆவார்கள்.

குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால், அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சலுகைகளை வேண்டுமானாலும் வழங்க முடியும்.

அதேபோல், இப்போதும் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா ஆகிய மூவரும் இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினால் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்.

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற அமர்வின் தலைவரான நீதியரசர் கே.டி. தோமஸ், 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் நேரம் வந்து விட்டதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

எனினும், அவரது கடிதத்திற்கு சோனியா பதிலளிக்கவில்லை.

7 தமிழர்களை விடுவிக்க பரிந்துரையும் செய்யவில்லை.

ஆனால், இப்போது 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் தமது குடும்பத்துக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில், சோனியாவிடம் நீதிபதி தோமஸ் முன்வைத்த அதே கோரிக்கையை ராகுல் காந்தியிடம் நான் முன்வைக்கிறேன். இதை ஏற்று 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுத வேண்டும்.

சட்டப்படி பார்த்தாலும், தர்மத்தின்படி பார்த்தாலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் தான். அந்த அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும் ராகுல் காந்தி கடிதம் எழுத வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!