சுவிஸில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: அதிர்ச்சி சம்பவம்!

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நேற்று காலை 7.00 மணியளவில், சுவிட்சர்லாந்தின் Montreux நகரிலுள்ள ஏழு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடியிலிருந்து, பிரான்ஸ் நட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஐந்து பேர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
    
அவர்களில் அந்தக் குடும்பத்தின் தலைவரான 40 வயது ஆண், அவரது மனைவியான 41 வயது பெண், இரட்டையரான அந்தப் பெண்ணின் சகோதரி, தம்பதியரின் எட்டு வயது மகள் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தம்பதியரின் மூத்த மகனான 15 வயது சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், பொலிசார் அந்த குடும்பத் தலைவரைக் கைது செய்ய வந்ததாலேயே அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதற்குக் காரணம், தம்பதியரின் பிள்ளைகளில் ஒரு பிள்ளை பள்ளிக்கு அனுப்பப்படவில்லையாம். அந்தப் பிள்ளைக்கு பெற்றோர் வீட்டிலேயே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆகவே, அது தொடர்பாக அந்த குடும்பத் தலைவரைக் கைது செய்வதற்காக பொலிசார் வாரண்டுடன் வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்கள். அந்த குடும்பத் தலைவர், கதவைத் திறக்காமலே என்ன விடயம் என்று கேட்க, பொலிசார் விடயத்தைச் சொல்ல, அதற்குப் பின் அந்த வீடு அமைதியாகிவிட்டதாம்.

அவர்கள் கதவைத் திறக்ககாததால் பொலிசார் திரும்பிச் செல்ல, அதற்குள், அந்த வீட்டின் மாடியிலிருந்து யாரோ விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கும்போது, நான்கு பேர் உயிரிழந்து கிடக்க, படுகாயமடைந்து கிடந்த அந்த 15 வயது சிறுவன் மட்டும் உயிருடன் இருந்ததால், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதற்கிடையில், அக்கம்பக்கத்தவர்கள் அந்த குடும்பத்தைக் குறித்து பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.

அந்த வீட்டின் தலைவர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாகவும், அவரது மனைவி பாரீஸில் பல் மருத்துவராக பணி செய்வதாகவும், அவரது இரட்டையரான சகோதரி கண் மருத்துவராக பணி செய்வதாகவும், பொதுவாக அவர்கள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்றும் அந்தப் பகுதியில் வசிப்போர் தெரிவித்துள்ளார்கள்.

அதுபோக, சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, அந்த வீட்டிலிருந்து பயங்கரமாக ஊதுபத்தி வாசனை வந்ததாக ஒருவர் தெரிவிக்க, வேறு சிலரோ, அவர்கள் ஒரு மதம் சார்ந்த குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!