பாதுகாப்பு துறை மந்திரியாக பதவியேற்ற நிர்மலா சீதாராமன்!

மத்திய மந்திரிசபையில் 9 மந்திரிகளின் பதவி இடம் காலியானதால் அந்த இடங்களுக்கு புதியவர்களை நியமிக்க மோடியும், அமித் ஷாவும் ஆலோசனை நடத்தி வந்தனர். நேற்று இரவு 9 பேரை புதிய மந்திரிகளாக பிரதமர் மோடி அறிவித்தார். பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி குமார் சவுபே (பீகார்), வீரேந்திரகுமார் (மத்தியபிரதேசம்), சிவ் பிரதாப் சுக்லா (உத்தரபிரதேசம்), அனந்த்குமார் ஹெக்டே (கர்நாடகா), ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் செகாவத், சத்யபால் சிங், அல்போன்ஸ் கன்னன் தானம் (கேரளா) ஆகியோர் மத்திய மந்திரிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்களில் ஹர்தீப் சிங் புரி முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரி ஆவார். சத்யபால்சிங் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி, அல்போன்ஸ் கண்ணந்தனம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு அது 10.30 மணிக்கு மாற்றப்பட்டது.இதற்கிடையே புதிய மந்திரிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேரும் பிரதமர் மோடி வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு பிரதமர் மோடி காலை உணவு வழங்கி விருந்து அளித்தார். பிறகு 9 பேரும் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டு வந்தனர். காலை 9.30 மணி முதல் பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர் கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். 10.30 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வந்ததும் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

முதலில் தர்மேந்திர பிரதான், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி ஆகிய 4 இணை அமைச்சர்கள் காபினெட் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களை தொடர்ந்து புதிய இணை மந்திரிகள் பதவி ஏற்றனர்.சிவ் பிரதாப் சுக்லா (உ.பி.), அஸ்வினி குமார் (பீகார்), வீரேந்திரகுமார் (ம.பி.), அனந்த்குமார் ஹெக்டே (கர்நாடகா), ராஜ்குமார் சிங் (பீகார்), ஹர்தீப் சிங் புரி (புதுடெல்லி), கஜேந்திரசிங் செகாவத் (ராஜஸ்தான்), சத்யபால் சிங் (உ.பி.), அல் போன்ஸ் கண்ணந்தனம் (கேரளா) ஆகியோர் வரிசையாக வந்து பதவி ஏற்றனர்.அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதி மொழியும் செய்து வைத்தார். 35 நிமிடங்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இதையடுத்து புதிய மந்திரிகள் அனைவரும் பிரதமருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமித் ஷா, அத்வானி, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பதவி ஏற்பின்போது மந்திரிகளின் இலாகா தொடர்பான விபரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மந்திரிசபையில் ஏற்படுத்தப்பட்ட புதிய மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக தொடங்கியது பாதுகாப்பு துறை மந்திரியாக தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனும் ரெயில்வே துறைக்கான புதிய மந்திரியாக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலக்கரித்துறையையும் இவர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே மந்திரியாக இருந்த சுரேஷ் பிரபு வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணன் வகித்துவரும் கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறையுடன் நிதித்துறை இணை மந்திரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரியாகவும், ராஜ் குமார் சிங் மின்சாரத்துறை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உமா பாரதிக்கு குடிநீர் மற்றும் நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதின் கட்காரிக்கு நீர்வளத்துறை நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி புனரமைப்பு ஆகிய கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.தர்மேந்திர பிரதானுக்கு திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை மந்திரியாக ஹர்தீப் புரி நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை இணை மந்திரியாக அல்போன்ஸ் கண்ணந்தனம் நியமிக்கப்பட்டுள்ளார். மின்சாரத்துறை இணை மந்திரியாக ஆர்.கே.சிங், விளையாட்டுத்துறை மந்திரியாக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷிவ் பிரதாப் சிங் சுக்லா நிதித்துறை இணை மந்திரியாகவும், அஷ்வினி சவுபே சுகாதாரத்துறை இணை மந்திரியாகவும், விரேந்திர குமார் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை இணை மந்திரியாகவும், அனந்த்குமார் ஹெக்டே திறன் மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மத்திய மந்திரிசபையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இதர மாற்றங்கள் தொடர்பான முழுமையான விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: