தன்னுயிரை கொடுத்து சிறுவர்களின் உயிரை காப்பாற்ற காரணமான ‘சாமன் குணன்’

தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் 13 பேர் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது. இதனிடையே முதற்கட்ட மீட்பு பணிக்கு முன்னர் மீட்பு வீரர்கள் களப்பணியாற்ற வசதியாக சில செயல்பாடுகளை செய்து உயிரை விட்ட முன்னாள் கடற்படை மேஜர் சாமன் குணன் என்பவரை தாய்லாந்து மக்கள் ஹீரோவாக கொண்டாடி வருகின்றனர்.

தானாக ஓய்வு:

தாய்லாந்தின் கடற்படையில் மேஜராக இருந்தவர் சாமன் குணன். கடலுக்கு அடியில் கூட ஆக்சிஜன் சிலிண்டரை மாட்டிக் கொண்டு எதிரிகளை தாக்கும் வல்லமை படைத்த ஒரு சில தாய்லாந்து வீரர்களில் இவரும் ஒருவர். 38 வயதான இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்னால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க எண்ணி, தானாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

சீல் படையுடன் தொடர்ந்த நெருக்கம்;

தாய்லாந்து கடற்படையில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கூட சாமன் குணனின் மனமும் உடலும் மீண்டும் மீண்டும் கடலை தேடி இருக்கிறது. இதனையடுத்து தாய்லாந்து கடற்படையில் இருக்கும் சீல் அணியினரிடம் நடப்பை தொடர்ந்துள்ளார்.அவர்களுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்து அவப்போது சில ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார்.

முதல் ஆளாக களத்தில் இறங்கினார்:

குகையில் மாட்டிய சிறுவர்கள் பற்றி கேள்விப்பட்டவுடன் சாமன் குணன் மிகவும் துடித்து போயுள்ளார். அவர்களை எப்படியாவது மீட்டே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் ஆளாக களத்தில் குதித்து இருக்கிறார். எனவே தனக்கு அருகில் இருந்த சீல் படை அலுவலகத்திற்கு சென்று, பின்னர் அங்கிருந்து கடற்படை விமானத்தில் குகை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். விமானத்தில் ஏறுவதற்கு முன் அந்த சிறுவர்களை சீல் படை காப்பாற்றும். நான் அந்த இடத்திற்கு செல்ல தயாராகிவிட்டேன்.

அவர்களுக்கு நான் உதவி செய்ய போகிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு சென்றார். அங்கு சென்றதும் உடனே வேக வேகமாக வேலையில் இறங்கி இருக்கிறார். அதோடு, தன்னுடைய பழைய கடற்படை உடையை போட்டுக்கொண்டு வந்து, பழைய படி துணிச்சலாக குகைக்குள் சென்றுள்ளார். முதலில் அந்த குகைக்குள் குறுகலான பாதையில் எப்படி செல்வது என்று சக பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். பல வருட அனுபவத்தை எல்லோருக்கும் விளக்கி இருக்கிறார்.

சாமன் குணனுக்கு கொடுக்கப்பட்ட பணி:

குகைக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்ட பின்னர் அவர்களை வெளியே அழைத்து வரும் போது ஆக்சிஜன் தீர்ந்துவிடும். எனவே பாதையின் வழியில் ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை மாற்ற வேண்டும். இதற்காக 4.5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் குகைக்குள், ஆக்சிஜன் சிலிண்டர்களை சில இடங்களில் பொறுத்தவே இவர் சாமன் குணன் களமிறங்கினார்.

தவறாக கணிக்கப்பட்ட ஆக்சிஜன்:

ஆனால் அங்கு எவ்வளவு ஆக்சிஜன் இருக்கும் என்று அதிகாரிகள் தவறாக கணித்துள்ளனர். 12% – 20% வரை அங்கு ஆக்சிஜன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு பணி துவங்கப்பட்டது. ஆனால் களநிலவரப்படி அந்த குகையின் பாதையில் இருந்தது வெறும் 6% ஆக்சிஜன் மட்டுமே. இதனால் அந்த இடத்திலேயே மேஜர் சாமன் குணன் நிலைதடுமாறினார்.

சாவிலும் கடமையை செய்ய போராட்டம்:

குகையின் பாதைக்குள் குறைவான ஆக்சிஜன் இருந்ததால் சுவாசிக்க முடியாமல் தடுமாறிய போதும், சாமன் குணன் தனக்கு கொடுக்கப்பட்ட கடைசி சிலிண்டரை குகையின் கடைசி பக்கத்தில் வைக்க முயற்சித்தார். எனினும் ஆக்சிஜன் இல்லாமல் மயங்கி விழுந்து மரணித்தார்.

மக்களின் மனங்களில் இவர் தான் கதாநாயகன்:

தற்போது மொத்தமாக 6% ஆக்சிஜனுக்கு ஏற்றபடி அங்கு அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை 20% ஆக்சிஜன் இருக்கிறது என நினைத்து, சிலிண்டர்களை இறக்கி இருந்தால் குகையினுள் சிக்கியவர்களை மீட்டு வரும் வழியில் மரணம் அடைந்திருப்பார்கள். தவறாக கணிக்கப்பட்ட எல்லா கணக்கையும் சரியாக மாற்ற வைத்து தன் உயிரை கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய மேஜர் சாமன் குணனை அந்த நாடே கதாநாயகனாக கொண்டாடி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!