மேலாடைகளைக் களைந்து காயங்களை காட்டிய மாணவர்கள்: – அதிர்ச்சியில் உறைந்த நீதிபதி

போலீஸார் அடித்து துன்புறுத்துவதாக திருச்சியில் நேற்று போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.காவிரி மேலாண்மை அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்,தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில், நேற்று இரவு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள் ஒருங்கிணைந்து காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்தபோலீஸ் டி.சி.சக்திகணேஷ் தலைமையிலான போலீஸார், மாணவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டபின் நடந்த களேபரங்களில் அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அதையடுத்து, மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். மேலும், ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து அங்கேயும் மாணவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராடிய மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 4 பேருக்கு எலும்பு முறிந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி அரசு மருத்துவமனை அருகே, கர்நாடக அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

பதற்றம் அதிகமான நிலையில், சம்பவ இடத்துக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் வந்தார். அவர் ஆணையின்படி கைது செய்யப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களில் போலீஸாரை எதிர்த்துப் பேசியவர்கள், அரசுக்கு எதிராக அழுத்தமாகக் கோஷமிட்டவர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இறுதியாக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனை காவல்நிலையம், உறையூர் காவல் நிலையம், தில்லைநகர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. இதில் தில்லைநகர் மற்றும் ஜி.எச் காவல்நிலையத்தில் வழக்கு போடப்பட்ட 17 பேரில் திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 3 பேரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கும் வயதில்லை என்பதால் அவர்களைத் தவிர, மற்ற 12 பேரையும் 20-ம் தேதிவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் மேலும் 5 பேர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, நீதிபதியிடம் பேசிய மாணவர்கள், “போலீஸ்காரங்க பேருந்துக் கண்ணாடியை உடைத்தவர்களை விட்டுவிட்டு, சம்பந்தமில்லாமல் எங்களை அடித்து, சித்ரவதை செய்ததுடன், எங்கள் மேல் தாக்குதல் நடத்தினார்கள். காயம்பட்ட எங்களை இதுவரை மருத்துவரிடம்கூட காட்டவில்லை” என்றபடி சட்டென மேலாடைகளைக் களைந்து, காயங்களைக் காட்டினர். அனைத்தையும் நீதிபதி பதிவு செய்துகொண்டதுடன், 20-ம் தேதிவரை சிறைக்காவல் வைக்க உத்தரவிட்டார். இறுதியாகக் கைது செய்யப்பட்டவர்களைச் சிறைக்கு கொண்டு செல்லும்போது, இது எங்கள் மீதான அடக்குமுறை, காவிரிக்காகப் போராடிய எங்களை ரவுடிகளைப் போல் நடத்துகிறார்கள். நாங்கள் சிறைக்குப் போனாலும் தமிழக மக்கள் காவிரிக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றனர். இதனால் திருச்சி நீதிமன்ற வளாகம் பெரும்பரபரப்பாகவே காட்சியளித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!