மனதுக்குள்ளே பூட்டிவைக்க வேண்டாமே

13 முதல் 19 வயது வரையிலான அந்த பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள்.

மனதுக்குள்ளே பூட்டிவைக்க வேண்டாமே
பதின்ம பருவம் எனப்படும் டீன் ஏஜ் பருவம் பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தை உள்ளடக்கியது. 13 முதல் 19 வயது வரையிலான அந்த பருவத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். ‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோபாவம் பெரும்பாலானவர்களிடம் வெளிப்படும்.

மற்றவர்களின் அறிவுரைகளை காதுகொடுத்து கேட்க முன்வரமாட்டார்கள். அவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் ‘நல்லது எது? கெட்டது எது’ என்பதை முழுமையாக அறிந்து கொள்ள இயலாமல் தடுமாறுவார்கள். அந்த சமயத்தில் பெற்றோரின் அரவணைப்பு மிக அவசியம். குறிப்பாக தாய்மார்கள் மகளின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

* பதின்ம பருவத்தில் அதிகபடியான வளர்சிதை மாற்றம் நிகழும். உடல் உறுப்புகளின் வளர்ச்சி மாற்றத்தால் உணர்வுப்பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள். ஆதலால் உடல் வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். ‘இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித்தான் உடல் வளர்ச்சி இருக்கும்’ என்பதை புரியவைக்க வேண்டும்.

* சீரற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகமான உதிரப்போக்கு, அடிவயிற்றில் விட்டுவிட்டு ஏற்படும் வலி போன்ற பிரச்சினைகள் டீன் ஏஜ் பெண்களை அடிக்கடி வாட்டி வதைக்கும். அதுபற்றி அச்சம் கொள்ளவோ, கவலைப்படவோ தேவையில்லை. இது இயற்கையாக நடக்கும் விஷயம் என்பதை எடுத்துரைக்க வேண்டும். அந்த சமயங்களில் அவர்களின் உடல்நிலையும், மனநிலையும் பாதிப்புக்குள்ளாதவாறு ஆறுதலாக இருக்க வேண்டும்.

* டீன் ஏஜ் பெண்களின் உணவு விஷயத்திலும் தாய்மார்கள் அக்கறை கொள்ள வேண்டும். அந்த பருவத்தில் பெரும்பாலான பெண்கள் சரிவர சாப்பிடமாட்டார்கள். நொறுக்கு தீனிகள், பாஸ்புட் போன்ற துரித உணவுகள்தான் அவர்களின் விருப்பமான உணவு பட்டியலாக இருக்கும். சத்தான உணவு வகைகளை சாப்பிடாமல் அலட்சியம் காட்டுவது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையை ஏற்படுத்தும்.

* பதின்ம பருவ வயதில் சத்தான உணவுகளை சாப்பிட்டால்தான் எதிர்காலத்தில் உடல்நல பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும்.

* உடல் எடை அதிகரிப்பு டீன் ஏஜ் வயதினரை கவலை கொள்ள செய்யும் வகையில் விஸ்வரூபமெடுக்கும் பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்துகள் நிறைந்த சத்தான உணவுவகைகளை சாப்பிட பழக்க வேண்டும். அதேவேளையில் உடல் எடையை சீராக பராமரிப்பதிலும் கவனம் கொள்ள செய்ய வேண்டும்.

* பதின்ம பருவத்தில் பெரும்பாலான பெண்கள் ‘மேக்கப்’ விஷயத்தில் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள். உடுத்தும் உடை, அணியும் அணிகலன்களை தேர்வு செய்வதில் மெனக்கெடுவார்கள். மற்றவர்கள் எப்படியெல்லாம் தங்களை அலங்கரித்துக்கொள்கிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்ப்பார்கள். தன்னுடைய தேர்வு மற்றவர்களுக்கு பிடிக்குமா? என்ற கவலை அவர்களுக்குள் வந்து போகும். ஒருசிலர் ஹை ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிய விரும்புவார்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆசைப்படுவார்கள். அதெல்லாம் அந்த பருவத்தில் ஏற்படும் இயல்பான உடல் ரீதியான மாற்றங்கள்தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவோ, கண்டிக்கவோ கூடாது.

* டீன் ஏஜ் பருவத்தில் பெரும்பாலானவர்கள் இனக்கவர்ச்சிக்கும், காதலுக்கும் இடையே உள்ள இடைவெளியை புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார்கள். ஒருசிலர் எதிர்பாலினத்தவர்களிடமிருந்து தொந்தரவுகளை சந்திக்கக்கூடும். அது அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். அவர்களின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் கண்காணித்து பக்குவமாக எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும்.

* பிரச்சினையை மனதுக்குள்ளே போட்டு வைத்துக்கொள்ளவோ, தாமே தீர்வு காண முயற்சிக்கவோ கூடாது. குறிப்பாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மனக்குழப்பங்களை தயக்கமின்றி சொல்லும் அளவிற்கு தாய்-மகள் இடையேயான உறவு வலுப்பட வேண்டும். அதற்கு தினமும் போதுமான நேரத்தை மகளுடன் செலவிட வேண்டும். அதுவே டீன் ஏஜ் பருவ பெண்களின் மனதில் எழும் குழப்பங்களை தெளிவடைய செய்யும். தாயுடனான நெருக்கத்தையும் அதிகப்படுத்தும்.

* டீன் ஏஜ் வயதில் இனம் புரியாத குழப்பங்களும், மன அழுத்தங்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. தியானம், மூச்சு பயிற்சி மேற்கொண்டு வருவது மனதை இலகுவாக்கும். எண்ணங்களை சீராக்கும். குழந்தைகளுடன் விளையாடுவது, வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது போன்றவை மன அழுத்தத்தை குறைக்க வழிவகுக்கும்.

Tags: ,