கணவரின் நடத்தைகள் மனைவியை காயப்படுத்தக்கூடாது

கணவரின் நடத்தைகள், சுபாவங்கள் மனைவிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. உறவை மேம்படுத்த சில முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.

கணவரின் நடத்தைகள் மனைவியை காயப்படுத்தக்கூடாது
கணவன்-மனைவி இடையேயான உறவு இனிமையாக தொடர கணவன் ஒருசில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவரின் நடத்தைகள், சுபாவங்கள் மனைவிக்கு மனஸ்தாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. உறவை மேம்படுத்த சில முக்கியமான குறிப்புகள்:

* கணவன்-மனைவி உறவுக்குள் மூன்றாம் நபர்களின் தலையீட்டுக்கு மட்டுமல்ல, ஒப்பீட்டுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது. இதர பெண்களை மனைவியுடன் ஒப்பீடு செய்து, ‘நீ ஏன் அவர்களை போல் நடந்து கொள்ள மறுக்கிறாய். அவர்கள் கடைப்பிடிக்கும் வழக்கங்கள் உன்னிடம் ஏன் இல்லை’ என்று கேள்விகளை எழுப்பக்கூடாது. அது மனைவிக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.

* மற்றவர்கள் முன்னிலையில் அடுத்தவர்கள் மனைவியை புகழ்ந்தோ, குறை கூறியோ பேசுவதும் கூடாது.

* மனைவியிடம் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கக் கூடாது. மனைவி எதிர்பார்க்கும் பொருளோ, விஷயமோ எதுவாக இருந்தாலும் தம்மால் அவரின் விருப்பங்களை நிறைவேற்றிக்கொடுக்க முடியுமா? என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிட வேண்டும். நிச்சயம் நிறைவேற்றி தருவேன் என்று சத்தியம் செய்துவிட்டு பின்னர் பின்வாங்கக் கூடாது. போலியான வாக்குறுதிகள் கணவன் மீது மனைவி வைத்திருக்கும் நம்பிக்கையை இழப்பதற்கு வழிவகுத்துவிடும். உறவில் விரிசலை ஏற்படுத்திவிடவும் அது முக்கிய காரணமாகிவிடும்.

* மனைவியின் உள்ளுணர்வுகளை புரிந்து கொண்டு அவர் கேட்காமலேயே ஆசைப்படுவதை நிறைவேற்றி கொடுப்பவராக கண்வர் விளங்க வேண்டும். முக்கிய தினங்களை நினைவில் வைத்துக்கொண்டு எதிர்பார்க்காமலேயே கணவர் பரிசு பொருட்களால் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது மனைவியின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஒருவேளை கணவருக்கு நினைவில்லை என்றாலும் சில தினங்களுக்கு முன்பாகவே முன்னோட்டமாக அதுபற்றி மனைவி பேசும்போது, புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

* கணவர் தான் எப்போதும் பிசியாக இருப்பது போல் காண்பித்து கொள்ளக் கூடாது. அது மனைவியிடம் விரக்தியை ஏற்படுத்திவிடும். பெண்கள் தங்களுடைய விருப்பங்களை மனம் விட்டு பேச நினைப்பார்கள். அப்போது கணவர் வேறு சிந்தனையிலேயே மூழ்கி இருந்தால், முகம் கொடுத்து பேசாமல் இருந்தால் அது பிரச்சினைகள் தோன்ற காரணமாகிவிடும்.

* மனைவி நல்ல விஷயங்களை செய்யும்போதோ, வித்தியாசமாக ஏதாவது செய்ய முயற்சிக்கும்போதோ கணவர் ஊக்கப்படுத்த வேண்டும். மனைவியின் செயல்களை உற்சாகப்படுத்தவோ, பாராட்டவோ செய்யாமல் அமைதி காக்கக் கூடாது.

* மனைவியின் நடவடிக்கைகள் மீது சந்தேகப்படுவதோ, சந்தேகப்பார்வை வீசுவதோ கூடாது. தவறு இருந்தால் பக்குவமாக புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர தடாலடியாக செயல்பட்டு மனவருத்தமடைய செய்துவிடக்கூடாது.

* மனைவியிடம் சிக்கனத்தை காட்டக்கூடாது. மனைவியின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் கூட சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியதில்லை. அதுபோல் மனைவி செய்யும் சின்ன சின்ன செலவுகளுக்கெல்லாம் கணக்கு கேட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. அது கசப்பை ஏற்படுத்திவிடும்.

Tags: ,