வல்லுறவுக் குற்றம்சாட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலைவருடன் திலக் மாரப்பன சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் ஒருவரே முதலில் சந்தித்துப் பேசியுள்ளார்.

மூன்று நாட்கள் பயணமாக நேற்றுமாலை புதுடெல்லி சென்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான, விஜய் ஜோலி நேற்றிரவு சந்தித்து, மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார். இதையடுத்து, இவர்கள் பேச்சுக்களையும் நடத்தியுள்ளனர்.

புதுடெல்லி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான விஜய் ஜோலி பாஜகவின் வெளிநாட்டு விவகாரப் பிரிவின் முன்னாள் தலைவராவார்.

பாஜகவின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருக்கும் இவர், மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியதை அடுத்து, அவருக்கு எதிராக புதுடெல்லி காவல்துறை பாலியல் வல்லுறவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் குர்கானில் உள்ள விடுதி அறை ஒன்றில், தனக்கு மயக்க மருந்து கொடுத்து, விஜய் ஜோலி, வல்லுறவுக்குட்படுத்தியதாக பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார். எனினும் விஜய் ஜோலி அதனை மறுத்திருந்தார்.

வல்லுறவுக் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சர்ச்சைக்குரிய பாஜக தலைவர் ஒருவரே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரை புதுடெல்லியில் முதன் முதலில் சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,