வந்தாரை வாழவைத்து சொந்த நாட்டானைச் சுரண்டும் யாழ் மாநகர சபை!

நல்லூர் பெருந்திருவிழாக் காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குக் கிடைத்த வருமானம் இரண்டரைக்கோடி ரூபா என்றும் அதில் ஒருகோடியே முப்பத்தியேழு இலட்சத்து நாற்பத்துமூவாயிரத்து நூற்றியறுபது ரூபா இலாபமாக எஞ்சியுள்ளது என்றும் மாநகர ஆணையாளர் பெருமியம் கொள்கிறார்.

உண்மையில் இதில் பெருமைப்பட என்னதான் இருக்கிறது என்று விளங்கவில்லை. மாறாக யாழ்ப்பாணம் மாநகர சபை ஏழை மக்களின் வயிற்றில் அடித்துத்தான் இவ்வளவு பெரும்பணத்தை வறுகி எடுத்துள்ளது என்றே சொல்லமுடியும்.

இன்றைக்கு கச்சான் தொழிலையே நம்பி எத்தனையோ குடும்பங்கள் சீவித்துக்கொண்டிருக்கின்றன.

வருடத்தில் அவ்வப்போது வரும் பெரிய கோவில்களின் திருவிழாக்கள்தான் இந்தக் குடும்பங்களின் உயிர்நிலையைத் தாங்கிப் பிடிக்கின்றன. இந்தக் காலங்களில் சேர்க்கின்ற பணம்தான் பல குடும்பங்களின் பலநாள் பட்டினியைப் போக்குகின்றன.

ஆனால், உள்ளூராட்சி மன்றங்கள் எனப்படும் பிரதேசசபை, மாநகர சபை என்பன மலையளவு வரி இறுப்பனவுகளைச் செய்து பல குடும்பங்களின் வயிற்றிலடிக்கின்றன.

நல்லூர் திருவிழாக் காலத்தில் கச்சான் கடை உள்ளிட்ட இதர சில்லறைக் கடைகளை ஆலய வளாகத்தில் அமைக்கவேண்டுமாயின் மாநகரசபைக்கு குறிப்பிட்டதொகைப் பணம் வரியாகக் கொடுக்கவேண்டும் என்பது விதி.

இந்த விதி எத்தனையோ ஏழை வியாபாரிகளின் விதியை அந்தோ கதியாக்கியிருக்கிறது என்பதை யாராவது மக்கள் பிரதிநிதிகளோ ஊடகத்தாரோ பேசியிருக்கின்றார்களா?

ஏழை வியாபாரிகளிடம் ஐம்பதிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலே வரி அறவிடும் இவர்கள் அதன்மூலம் சேர்ந்த பணத்தினை வைத்துப் பெருமைப்படுமளவுக்கு என்ன சாதனை கண்டார்கள்?

உண்மையில் இலட்சக்கணக்குவரை வரி ஏறுவதற்கு வியாபாரிகளும் ஒரு காரணியாக இருக்கின்றார்கள்தான்.

ஏட்டிக்குப் போட்டியாக வரி இறுப்பனவை ஏலம்போட்டு இலட்சக்கணக்குவரை ஏற்றிவிடுவதில் அவர்களிடம் ஏதாவதொரு நம்பிக்கை இருந்திருக்கும். எப்படியாவது அவ்வளவு பணத்தினையும் சம்பாதித்துவிடலாம் என்ற வைராக்கியம் இருந்திருக்கும்.

ஆனால் நினைத்த இலக்கை அடையமுடியாமல் பெரும் சோகத்தோடு நல்லைக் கந்தனிடம் பழிபோட்டுவிட்டு மீண்ட எத்தனையோ கச்சான் வியாபாரிகள் சாட்சிகளாகவுள்ளனர்.

உண்மையில், இலட்சக்கணக்கில் வரி கொடுத்து ஆலய வளாகத்தினுள் இருந்த உள்ளூர் கச்சான் வியாபாரிகளைவிட வரி ஏதுமே கொடுக்காது ஆலயத்தின் வளாக எல்லைக்கு அப்பால் நின்று கைப் பொதிகளில் விற்பனை செய்த தென்னிலங்கை வியாபாரிகளுக்கு இலாபம் அதிகமே.

அதே வெளி எல்லையில் வீதியோரமாக இருந்து கச்சான் விற்ற உள்ளூர் வியாபாரிகளிடமும் ஆயிரம் இரண்டாயிரம் என அறவிடப்பட்டிருக்கிறது.

ஏழை மக்களின் வயிற்றிலடித்துச் சேர்த்த பணத்தை நகர அபிவிருத்திக்கும் ஏனைய சேவைகளுக்கும் பயன்படுத்தப்போவதாக ஆணையாளர் கூறியிருக்கிறார்.

நகர அபிவிருத்தியை அரசாங்கம் பார்த்துக்கொள்ளட்டுமே, வருடா வருடம் ஒரு தொகைப் பணத்தை மீண்டும் திறைசேரிக்கே அனுப்பிக்கொண்டிருக்கும் மாகாணசபை பார்த்துக்கொள்ளலாமே. மக்கள் பணத்தை நம்பித்தான் நகர அபிவிருத்தி இருக்கிறதா?

சம்பவம் ஒன்று நடத்துவிட்டது, அதனோடு எல்லாம் முடிந்துவிட்டதென்று அனைத்தையும் கடந்துசெல்லும் கண்மூடித்தனமான மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அதற்குப் பின்னரான சம்பவங்கள் எப்படிச் சென்றுகொண்டிருக்கின்றன, எப்படியெல்லாம் இருட்டடிக்கப்படுகின்றன என்பதை நாம் யாருமே சிந்திப்பதில்லை.

நல்லூர் திருவிழாக் காலத்தில் கிடைத்த வருமானத்தில் பாதிப் பங்கையேனும் தம்மால் பாதிக்கப்பட்ட எங்கள் அப்பு ஆச்சியர்க்கு மாநகரசபை பகிர்ந்தளிக்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதற்கு முறையான ஒரு வழிமுறையைப் பின்பற்றி யாருக்கும் பாதிப்பற்ற-எல்லை தாண்டாத ஒரு வரி இறுப்பனவை மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் கந்தனின் புண்ணியம் எல்லோருக்கும் கிடைக்கும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழராகிய நாம் சொந்த நாட்டானைச் சுரண்டிக்கொண்டு இலாப நட்டங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது கேவலத்திலும் கேவலமான செயலாகும்!

Tags: ,