காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுகள் யாழ்., கிளிநொச்சியில்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான அடுத்த பொது அமர்வுகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளன.

நாளை யாழ்ப்பாண மாவட்டத்திலும், நாளை மறுநாள் கிளிநொச்சி மாவட்டத்திலும் இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் காணாமல் போனோருக்கான பணியகத்தின் ஏழு ஆணையாளர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புகள், இந்த விவகாரத்துடன் இணைந்து பணியாற்றும் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்களைச் சந்தித்து, தமது அமைப்பின் செயற்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கவுள்ளனர்.

அத்துடன், பணியகத்தின் செயற்பாடுகளை செம்மைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் பெறவுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலான அமர்வுகள் பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறவுள்ளன.

நாளை முதற்கட்டமாக, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர், யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், சங்கானை, சண்டிலிப்பாய், தெல்லிப்பழை பிரதேச செயலகங்களைச் சேர்ந்த குடும்பங்களுடனான சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.

கோப்பாய், சாவகச்சேரி, கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுடனான சந்திப்பு அடுத்த கட்டமாக இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!