சிறிலங்காவுடன் உறவுகளை பலப்படுத்த இந்தியப் பிரதமர் விருப்பம் – மாரப்பனவிடம் எடுத்துரைப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஹைதராபத் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“ சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்று பிற்பகல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

சிறிலங்காவின் வெளிவிவகாரர அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக, திலக் மாரப்பனவுக்கு, இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துக்களைக் கூறினார்.

அனைத்துலக வெசாக் நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, கடந்த மே மாதம் தாம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் பயனுள்ளதாக அமைந்தது என்று இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

சிறிலங்காவுடனான உறவுகளுக்கு இந்தியா கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இரண்டு நாடுகளும் ஆழமான- பரந்த அடிப்படையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கி, பலப்படுத்திக் கொள்வதற்கு, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.” என்று கூறப்பட்டுள்ளது

Tags: , , ,