விரைவில் உயரவிருக்கும் உணவுகளின் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி!

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கட்சி ஒன்றிய அரசின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு வருகிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விண்ணைமுட்டும் அளவுக்கு உயரும் அவலமும் தொடர்கிறது. அந்த வகையில் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு உயர்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் தண்ணீர் வாங்குவதற்கு கூட மக்கள் கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
    
ஐந்து மாநில தேர்தலுக்காக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்து வந்த ஒன்றிய பாஜக அரசு அதன் பிறகு தொடர்ந்து விலையேற்றத்தை அறிவித்தபடி இருந்தது.
இதன் காரணமாக டீ, காபி போன்றவற்றின் விலை 10ல் இருந்து 12, 15 ரூபாய் என அதிகரித்துவிட்டது. அதேபோல வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாதந்தோறும் இருமுறை உயர்த்தப்பட்டு வருகிறது.

இதனால் மளிகை சாமான் பொருட்களின் விலை கூடியிருக்கிறது. இந்த நிலையில், டீ, காபி விலை உயர்ந்தது போன்று உணவு விடுதிகளில் விற்கப்படும் இட்லி, தோசை போன்ற உணவுகளின் விலையும் 10 முதல் 20 சதவிகிதத்துக்கு அதிகரிக்கப் போவதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, 20 ரூபாய்க்கு விற்கப்படும் இட்லியின் விலை 22 அல்லது 24 ரூபாய்க்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வால் ஓட்டல்களிலேயே நித்தமும் சாப்பிட்டு வருவோரின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் நிலை உருவாகிவிடும் என அச்சம் சூழ்ந்துள்ளது. மேலும் இன்னும் எந்தெந்த பொருட்களின் விலையெல்லாம் உயரப்போகிறதோ என்ற அதிர்ச்சியும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!