இந்திய மின்வினியோக மையங்களை உளவு பார்த்த சீனா: அதிர்ச்சியளித்த அமெரிக்கா!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் சீராக வினியோகிக்கப்படுவதனை உறுதி செய்வதற்காக வட இந்தியாவில் மின்ஆற்றல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்கள் ஒருங்கிணைந்த மின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்கின்றன. இவற்றில் வட இந்தியாவில் உள்ள 7 மின்வினியோக மையங்களை, சீன அரசுடன் தொடர்புடைய சைபர் குழுக்கள் இலக்காக வைத்து செயல்பட்டு உள்ளன என அமெரிக்காவை அடிப்படையாக கொண்டு இயங்க கூடிய ரெக்கார்டட் பியூச்சர் என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.
    
இந்த அமைப்பின் அச்சுறுத்தல் ஆய்வு பிரிவு வெளியிட்டு உள்ள செய்தியில், சீனாவின் இந்த இலக்கானது வடஇந்தியாவை நோக்கி இருந்துள்ளது. லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லை பகுதிகளை கண்காணிக்கும் வகையில் இது அமைந்துள்ளது என தெரிவித்து உள்ளது. எனினும் சரியான இடங்களை அந்த அமைப்பு அடையாளம் காட்டவில்லை.

இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த ரகசிய தகவல் சேகரிப்பு பணியானது கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 27ந்தேதியில் இருந்து நடப்பு 2022ம் ஆண்டு மார்ச் 15ந்தேதி வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருந்துள்ளது.

பன்னாட்டு தளவாட நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் ஒன்று மற்றும் தேசிய அவசரகால பொறுப்பு அமைப்பு ஆகியவையும் இந்த தாக்குதல்களுக்கு இலக்காக கொள்ளப்பட்டு உள்ளன.
இதற்காக இன்டர்நெட் புரோட்டோகால் கேமிராக்கள், சி.சி.டி.வி. நெட்வொர்க்குகள் மற்றும் இணையதளம் வழியே இயங்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள் ஆகியவற்றை ரகசிய முறையில் சீனா பயன்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ந்தேதி முதல் ராணுவ மோதல் ஏற்பட்டு, எல்லையில் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்பு படைகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இன்னும் உரிய தீர்வு எட்டப்படாத சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், ரகசிய முறையில் பின்னால் இருந்து கண்காணிக்கும் உளவு வேலையில் சீனா ஈடுபட்டுள்ள தகவலை அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!