எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகிவிடக் கூடாது: – எச்சரிக்கும் வைகோ

தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்ற அரசின் கொள்கை முடிவில் முதல்வர் பழனிசாமி உறுதியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கதுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகிவிடக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் மனித வளமேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தர வேண்டும்; எட்டு வாரங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதுடன், நவோதயா பள்ளிகள் அமைக்கத் தேவையான உள் கட்டமைப்புகளை அமைத்துத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் நவோதயா வித்யாலயா சமிதி என்ற அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 598 இடங்களில் ஜவஹர் வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்துக்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்கப் பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன. நவோதயா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் 1986-ம் ஆண்டு முதல் இப்பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி அளிக்கப்படவில்லை. பா.ஜ.க. அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தி மொழியை பல வகைகளில் திணிக்கவும், சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தை புகுத்தவும் தீவிரமாக செயலாற்றி வருகிறது. கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வியை திணிக்க தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து, கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கேற்ப மாநில பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவும், கற்பித்தலை மேம்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன. பயிற்று மொழியைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய பள்ளிகளை மாநிலங்களில் திணிக்க முற்படுவது ஏற்கத்தக்கது அல்ல. ஏற்றத் தாழ்வுகள் அற்ற கல்வியை வழங்குதற்கு பொதுப்பள்ளிகளை மேம்படுத்துவதுதான் சாலச் சிறந்தது ஆகும்.

நவோதயா பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மூலதன மற்றும் தொடர் செலவினைப் பொதுப்பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் பயன்படுத்தினால், கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளுக்கு பயனளிப்பதாக இருக்கும். நவோதயா பள்ளிகள் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் போதிய கல்வி வசதிகள் உள்ளன. மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பது கொள்கை முடிவாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்வர வேண்டும். டெல்லி பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத மொழி ஆதிக்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி அரசு பலியாகிவிடக் கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags: