சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது:கடவுளின் சாபம்

ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கடவுளின் சாபம் அவர்கள் மீது தற்போது பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கத்தோலிக்க திருச் சபையினர் மற்றும் மக்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே பேராயர் இதனை தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடந்த மிக மோசமான இரத்தம் சிந்துதலை எங்களால் மறக்க முடியாது. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் தேர்தலின் போது இந்த சம்பவத்தை முழுமையாக பயன்படுத்தியது.

இந்த பெரிய அழிவின் பின்னணியில் மிகப் பெரிய சதி இருக்கலாம் என்று அன்றே எமக்கு தோன்றியது. அந்த சதிகாரர்கள் யார் என்பது தற்போது எமக்கு வெளிப்பட்டு வருகிறது. அந்த சூழ்ச்சியாளர்களுக்கு ஆட்சியை பிடிக்க முடியும். எனினும் அதனை பாதுகாக்க முடியாது.

கடவுளின் சாபம் அவர்கள் மீது பட்டுள்ளது. ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்றினாலும் அதனை பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது. ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரினோம், இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அவற்றை நடைமுறைப்படுத்தாது முஸ்லிம் மக்கள் மீது மாத்திரம் குற்றத்தை சுமத்தி விட்டு, அதன் பின்னணியில் இருந்த சக்திகளை மூடிமறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்கான சாபமே தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு முறையில் சட்டமா அதிபர் அடிமையாகவே மாறிவிட்டார். இதனால், நீதியை பெற்றுக்கொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் இல்லை. ” எனவும் பேராயர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!