சுயாதீன அணியினர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு இல்லை!

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை. அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்த விரும்பில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
    
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பங்காளி கட்சிகள் நிலைப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் நாடு தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்பதற்கு எவ்வித மாற்று கருத்தும் கிடையாது.

முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை ‘பொருளாதார கொலையாளி’என விமர்சிப்பதில் எவ்வித தவறும் கிடையாது. பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டுமாயின் நாட்டில் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையுடன் காணப்பட வேண்டும் இருப்பினும் நடைமுறையில் அவ்விரண்டும் கேள்விக்குறியான தன்மையில் உள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அரசாங்கம் பதவி விலகினால் ஒன்று பொதுத்தேர்தல் இடம்பெற வேண்டும் அல்லது பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை என்பதால் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்.

இடைக்கால அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறான பின்னணியில் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தற்போது பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தி பொருளாதார பாதிப்பை மேலும் தீவிரப்படுத்த நாம் விரும்பவில்லை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!