இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்சவினருக்கு பதவிகள் கிடையாது

உத்தேச இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தில் ராஜபக்சவினர் எவருக்கும் பதவிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்ற யோசனையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படுமா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார்.

கோட்டா கோ ஹோம் என கூறினாலும் தற்போதைய ஜனாதிபதியுடன் இந்த பயணத்தை மேற்கொள்ள நேரிடுமா எனவும் செய்தியாளர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அவர், அதனை தவிர மாற்று வழிகள் எதுவுமில்லை எனக் கூறியுள்ளார். தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய 113 பெரும்பான்மை பலத்தில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கினால், அமைச்சரவையும் கலைந்து விடும்.

எனினும் ஜனாதிபதியை பதவி நீக்க வேண்டுமாயின் அரசியல் குற்றப் பிரேரணையை நிறைவேற்ற வேண்டும். இதனை தவிர வேறு வழிகளில் ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்க முடியாது. ஜனாதிபதி தானாக முன்வந்து பதவி விலகலாம்.

எனினும் ஜனாதிபதி பதவி நீக்க வேறு சட்ட ரீதியான முறைகள் எதுவும் இல்லை எனவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை ராஜபக்சவினர் இல்லாத அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ராஜபக்சவினரும் அடங்கிய அமைச்சரவை மீண்டும் நியமிக்கப்பட்டால், மக்கள் வீதியில் இறங்குவதை தடுத்து நிறுத்த முடியாது. இதனால், நாடு மேலும் அராஜக நிலைமைக்கு செல்லும்.
இது நாடு பற்றி சிந்திக்க வேண்டிய நேரமே தவிர அரசியல் கட்சிகள், நபர்கள் அல்லது குடும்பங்களை பற்றி சிந்திக்க வேண்டிய நேரமல்ல. மக்கள் எந்தளவுக்கு வீதியில் இறங்கி கோஷமிட்டாலும் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடியே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும்.

மக்கள் வீதியில் இறங்கி போராடுவது நியாயமானது எனினும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதன் மூலம் சமூக செயற்பாடுகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாட்டின் விம்பம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கும் போது, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!