இரிடியம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த தந்தை – மகன்!

ஈரோட்டில், இரிடியம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் தந்தை – மகன் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஈரோடு மாவட்டம் பெரிய சடையம்பாளையம் இரணியன் வீதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர், `இரிடியம் தருவதாக ஆசைவார்த்தை கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்களைக் கைதுசெய்ய வேண்டும்’ என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரையடுத்து, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். தேடுதலில், இரிடியம் தருவதாக ஏமாற்றி மோசடிசெய்த ஈரோட்டைச் சேர்ந்த குருசாமி மற்றும் அவரின் மகன் நெப்போலியன் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும், மோசடிசெய்த பணத்தில் வாங்கிய கார், டிராக்டர், பைக் என அவர்களிடமிருந்த 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களையும் போலீஸார் பறிமுதல்செய்தனர். விசாரணையில், தங்களிடம் பழைமையான விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகக் கூறி, யுவராஜிடம் சுமார் 4 கோடியே 22 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், இந்த மோசடி வேலையில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் தேடிவருகின்றனர்.

ஏற்கெனவே, கொங்கு மண்டலத்தில் ஈமு கோழி மோசடியில் ஆயிரக்கணக்கில் மோசடி நடந்த நிலையில், தற்போது இந்த இரிடிய மோசடி கொங்கு மண்டலத்தில் பல இடங்களில் நிகழ்ந்திருக்கிறது என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். மேலும், இரிடியத்துக்காக மோசடிக் கும்பலிடம் பணத்தை ஏமாந்தவர்கள், பெரும்பாலும் பெரிய தொழிலதிபர்கள் என்பதால் வெளியே வந்து புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!