தீவிரமடையும் போராட்டம் – ரணில் விடுத்துள்ள விசேட பணிப்புரை

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள இளைஞர்கள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள இளைஞர்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதமர், இது அரசியல் அல்லது வேறு சக்திகளின் கீழ் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அரசியல்வாதிகள் தலையிட்டு போராட்டத்தை கெடுக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது, இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் அரசியல் ரீதியில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.

இளைஞர் யுவதிகள் சுயாதீனமாக ஆரம்பித்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட கூடாதென ரணில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக அரசியல் சிந்தனைகளை அகற்றி, நாட்டின் இளைஞர்களாக இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கட்சியுடன் இணைந்த அனைத்து இளைஞர் குழுக்களுக்கும் முன்னாள் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதில் இளைஞர்கள் பொறுமையுடனும், அமைதியாகவும் இருக்க வேண்டும் எனவும் அகிம்சை வழியில் போராட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!