வித்தியா கொலை வழக்கில் செப்ரெம்பர் 27ஆம் நாள் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 27ஆம் நாள் வழங்கப்படும் என்று யாழ். மேல் நீதிமன்றத்தின் சிறப்பு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு பாடசாலைக்குச் சென்ற மாணவி, கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக 9 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் சாட்சியத் தொகுப்புரைகள் இடம்பெற்றன.

நேற்றுமுன்தினம் அரசதரப்பில் முன்னிலையாகி தொகுப்புரை நிகழ்த்திய பிரதி சொலிசிற்றர் ஜெனரல், இந்தக் கொலை வழக்கில் 7 எதிரிகளுக்கு எதிரான நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு எதிரிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று எதிரிகள் தரப்பு தொகுப்புரை இடம்பெற்றது.

இதையடுத்து, செப்ரெம்பர் 27ஆம் நாள் வரை வழக்கை ஒத்திவைத்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் சசிமகேந்திரன் பிறேம்சங்கர், இளஞ்செழியன் ஆகியோரைக் கொண்ட தீர்ப்பாயம், அன்றைய நாளில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Tags: , , , ,