பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் கடும் நிபந்தனைகளுடன் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள நீதிவான், கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும், மாதத்தில் முதல் திங்கட்கிழமைகளில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கையொப்பமிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இவ் வழக்கு நேற்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இவ்வழக்கின் சந்தேக நபரான முன்னாள் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு வழக்கின் வாதிகள் தரப்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நிசாந்தன் தமது ஆட்சேபனையை தெரிவித்தார்

எனினும் ஆட்சேபனைக்கான காரணங்களில் நீதிமன்றம் திருப்தியடையாததால், சந்தேகநபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மூன்று லட்சம் ரூபா ரொக்கப்பணம் மற்றும் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப்பிணைகளுடன் பிணையில் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.

Tags: , ,