சிவில் நிர்வாக தகவல்களை இராணுவத்துக்கு வழங்கக் கூடாது! – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கக் கூடாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் நேற்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வட மாகாணச சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, கிளிநொச்சியில் இராணுவத்தின் ஆட்சியே நடைபெறுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

கிளிநொச்சி வைத்தியசாலைகளில் சில தரவுகளை இராணுவத்தினர் சேகரிப்பதாக வட மாகாண சபை உறுப்பினர் சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை தனது உரையில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் தமது அனுமதியில்லாமல் எந்தவொரு தரவுகளையும் இராணுவத்தினருக்கு வழங்கக் கூடாது என அரச அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவொன்றை பிறப்பித்தார்.

அதேவேளை இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகள் உட்பட தகவல்களை கோரினால், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் வட மாகாண முதலமைச்சர் அரச அலுவலகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!