காதலனை கரம்பிடிக்க மூதாட்டியை கழுத்தை நெரித்து கொன்ற பள்ளி மாணவி!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் பிள்ளை வீதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். சதாசிவம் இறந்து விட்டதால், நாகலட்சுமி தனது மகன் செந்திலுடன் வசித்து வந்தார்.

நேற்று காலை செந்தில் வேலை வி‌ஷயமாக வெளியில் சென்றார். வீட்டில் நாகலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இந்த நிலையில் மதியம் நாகலட்சுமியை பார்க்க அவரது மகள் சாந்தா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் நாகலட்சுமி மூச்சுபேச்சின்றி கிடந்தார்.
    
உடனடியாக சாந்தா அருகே உள்ள டாக்டர் ஒருவரை வரவழைத்து நாகலட்சுமியை பரிசோதித்தார். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பொள்ளாச்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். நாகலட்சுமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவர் கழுத்து, மூக்கு, கைகளில் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தது.

இதனால் யாராவது நகைக்காக கொலை செய்து இருக்கலாமா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரிக்க தொடங்கினர். முதலில் நாகலட்சுமியின் மகன், மகள்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது நாகலட்சுமியின் மகள் சாந்தா, தான் வீட்டிற்கு வந்தபோது, எங்கள் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது பள்ளி மாணவி வீட்டில் உள்ள ஷோபாவின் அருகே மறைந்து நின்றார் என தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது சிறுமி, நான் பாட்டியை பார்க்க வீட்டிற்கு வந்தேன். சிறிது நேரம் அவரிடம் பேசி கொண்டிருந்தேன். அந்த சமயம் நீலநிற சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் பாட்டியை பார்க்க வந்தார். அவர் நீண்ட நேரமாக அவரிடம் பேசி கொண்டிருந்தார். இதையடுத்து நான் தையல் கடைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிற்கு சென்றேன்.

கடைக்கு சென்று விட்டு மீண்டும் வந்தபோது அந்த வாலிபர் அவசர அவசரமாக வெளியேறினார். இதனால் சந்தேகம் அடைந்த நான் மூதாட்டி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் மயங்கிய நிலையில் கிடந்தார் என தெரிவித்தார்.

மாணவி அளித்த தகவலின்படி மூதாட்டி வீட்டிற்கு யாராவது வந்தார்களா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் மாணவி தெரிவித்த தையல் கடை குறித்தும் விசாரித்தனர். அப்போது மாணவி தெரிவித்த அனைத்து தகவல்களும் பொய் என்பது தெரியவந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மாணவி தெரிவித்தபடி வாலிபர் யாரும் வந்ததற்கான காட்சிகள் பதிவாகவில்லை. மாறாக மாணவி மூதாட்டி வீட்டிற்குள் செல்வதும் 1¼ மணி நேரம் கழித்து திரும்பி செல்லும் காட்சிகளே பதிவாகி இருந்தது.

இதனால் போலீசாருக்கு மாணவி மீது சந்தேகம் வலுத்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று, துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், மாணவி மூதாட்டியை நகைக்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மாணவி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் இந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். கடந்த 1½ வருடமாக நானும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வருகிறோம். அடிக்கடி சந்தித்து பேசி கொள்வோம். அப்போது ஒருநாள் அவரிடம் இன்னும் 4 மாதத்தில் எனக்கு 18 வயது வர உள்ளது. அதன்பின்னர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என காதலரிடம் தெரிவித்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார்.

நகை போட்டு திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு என்னுடைய குடும்பத்தாரிடம் பணம் இல்லை. இதனால் நான் இப்போது இருந்தே பணம் சேர்க்க போகிறேன் என்று தெரிவித்து, பணம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் பணம் சேர்க்க முடியவில்லை.

எனது வீட்டின் அருகே நாகலட்சுமி என்ற பாட்டி தனியாக வசித்து வந்தார். பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி பாட்டியின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசி அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தேன். தினமும் இப்படி அவரது வீட்டிற்கு சென்று அவருக்கு உதவுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

அப்போது தான் பாட்டியிடம் ஏராளமான நகைகள் இருப்பதும், அவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் எனக்கு தெரிந்தது. நகையை பார்த்ததும் எனக்கு மகிழ்ச்சி பொங்கியது. மூதாட்டியிடம் இருக்கும் நகைகளை எடுத்து கொண்டால் நாம் காதலனை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழலாம் என்ற ஆசை உருவானது. இதற்காக என்ன செய்யலாம் என்று கடந்த 2 மாதங்களாக யோசித்து கொண்டிருந்தேன்.

அப்போது தான் வழக்கமாக வீட்டிற்கு செல்வது போல் சென்று மூதாட்டியிடம் பேசி அவரிடம் நகையை கொள்ளையடித்து விடலாம் என நினைத்தேன். அதன்படி நேற்று காலை வீட்டு வாசலில் நின்று மூதாட்டியின் வீட்டில் யாராவது இருக்கிறார்களா? என்பதை நோட்டமிட்டேன். அப்போது மூதாட்டி மட்டுமே வீட்டில் இருந்தார்.

இதையடுத்து மூதாட்டி வீட்டிற்கு சென்று அவரிடம் பேசினேன். பேசி கொண்டிருக்கும்போதே, அவர் கவனத்தை திருப்பி விட்டு, கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றேன். இதனை பார்த்த மூதாட்டி அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றார். இதனால் பதறிபோன நான் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, மூதாட்டியை கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து நான் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை, கையில் இருந்த வளையல், காதில் இருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவற்றை கழற்றி எடுத்து கொண்டு எனது வீட்டில் கொண்டு வைத்தேன். ஆனால் இப்போது போலீசில் சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் பிளஸ்-2 மாணவியை கைது செய்தனர். இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்கிடையே பள்ளி மாணவியின் காதலனுக்கு இந்த கொலையில் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவருக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது.

காதலனை திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு பள்ளி மாணவி ஒருவர் கொலைகாரியாக மாறிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!