தீவிரமடையும் கொழும்பின் அரசியல் களம்: நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மேலும் 42 பேர் ஆதரவு தெரிவிக்கும் வாய்ப்பு

கோட்டாபய ராஜபக்சவின் பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கும், குற்றவியல் பிரேரணைக்கும் ஆதரவளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 11 கட்சிகளின் கூட்டமைப்பும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 42 பேரின் ஆதரவு தேவை என்று குறிப்பிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல, இது தொடர்பில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, 11 கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக குறிப்பிட்;டுள்ளார்.

அவர்களும் தங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்கு தயக்கம் காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பந்து தற்போது எதிர்கட்சியின் மைதானத்தில் உள்ளது.
எனவே மக்களால் வெறுக்கப்படும் ராஜபக்ச ஜனாதிபதியை பதவியிலிருந்தும் பொதுஜன பெரமுனவை ஆட்சியிலிருந்தும் விடுவிக்க அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு பிரேரணைகளும் உதவும் என்று கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 113 பேரை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக இன்று பொதுஜன பெரமுன புதிய அமைச்சரவையை உருவாக்குகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!