ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று மகளுடன் கைது ஆகிறார்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று கைது ஆகிறார். அவர்களை அடியலா சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #NawazSharif #Maryam

பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.

அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்து, ஏற்பாடு ஆகி உள்ளது.

நவாஸ் ஷெரீப்பையும், மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது எந்த ஹெலிகாப்டரை தனது பயணங்களின் போது பயன்படுத்தினாரோ அதே ஹெலிகாப்டரில் அவர் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

கேப்டன் சப்தார் ஏற்கனவே அடியலா சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

லண்டனில் இருந்து நாடு திரும்புவதையொட்டி நவாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “குல்சூம் நவாசுக்கு இன்னும் செயற்கை சுவாசம்தான் அளிக்கப்படுகிறது. அவரை நினைவு திரும்பிய நிலையில் பார்க்க விரும்புகிறேன். இப்போதைக்கு அவரை விட்டு விட்டு பாகிஸ்தான் திரும்புகிறேன்” என கூறினார்.

மேலும், “நான் என் நாட்டுக்காக போராடுகிறேன். சிறையோ, தண்டனையோ என்னை தடுத்து நிறுத்தி விட முடியாது. பாகிஸ்தான் மிகப்பெரும் கஷ்டத்தில் உள்ளது. நான் என் நாட்டை காக்கவே அங்கு செல்கிறேன்” என கூறியது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!